[ad_1]

ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது இரான் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது. சிரியாவில் உள்ள அதன் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ், “பிராந்திய அளவிலான பேரழிவு அதிகரிப்பின் ஆபத்து குறித்து ஆழ்ந்த கவலையுடன்” இருப்பதாகக் கூறியுள்ளார்.

சுமார் 300 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் இரானால் ஏவப்பட்டதாகவும், சில ஏவுகணைகள் இராக் மற்றும் ஏமனில் இருந்து வந்ததாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. ஊடகங்களிடம் பேசிய இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, நள்ளிரவில் ஏவப்பட்ட ஏவுகணைகள் இராக் மற்றும் ஏமனிலிருந்து வந்ததாகத் தெரிவித்தார்.

இரானால் ஏவப்பட்ட 99% ட்ரோன்கள் அல்லது ஏவுகணைகள் இஸ்ரேல் வான்வெளியை அடைவதற்கு முன்னதாகவே சுட்டு வீழ்த்தப்பட்டதாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

‘குறிப்பிட்ட இலக்குகளை’ குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இரானின் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படை (IRGC) தெரிவித்துள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிபிஎஸ் செய்திகளின்படி, அமெரிக்கா சில ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள், ‘இந்த அச்சுறுத்தல்கள் தேவையான இடங்களில் தடுக்கப்படுகின்றன’ என்று கூறியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் போர்க்கால அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

என்ன நடந்தது?
இஸ்ரேல் மீது இரான் திடீர் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா, பிரிட்டன் கண்டனம் – என்ன நடக்கிறது?
ஆளில்லா விமானம் இதுவரை இஸ்ரேலை வந்தடைந்ததா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இரான் இஸ்ரேலில் இருந்து 1,800 கி,மீ தொலைவில் உள்ளது. அதேநேரம், ஆளில்லா விமானங்களை எங்கு வீழ்த்தியது என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை.

இஸ்ரேல், லெபனான் மற்றும் இராக் ஆகியவை தங்கள் வான்வெளியை மூடியுள்ளன. சிரியா, ஜோர்டான் ஆகியவை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளை எச்சரிக்கைப்படுத்தி வைத்துள்ளன.

ஏப்ரல் 1-ம் தேதி சிரிய துணைத் தூதரகம் தாக்கப்பட்ட பிறகு, இரான் பழிவாங்கும் விதமாகப் பேசியது. இந்தத் தாக்குதலில் உயர்மட்ட தளபதி உள்பட 7 ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் பொறுப்பு என இரான் கூறியது. ஆனால், இஸ்ரேல் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தவோ நிராகரிக்கவோ இல்லை.

பிரிட்டன், அமெரிக்காவை தொடர்ந்து உதவிக்கு வந்த பிரான்ஸ்
இரானின் தாக்குதலுக்கு எதிராகத் தற்காத்துக்கொள்ள பிரான்ஸ் உதவியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இரான் இஸ்ரேல் மீது நள்ளிரவில் நடத்திய தாக்குதலுக்கு எதிராகப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள நாடுகளில் பிரான்ஸும் இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.

“பிரான்சில் மிகச் சிறந்த தொழில்நுட்பம், போர் விமானங்கள், ரேடார் உள்ளன. மேலும் அவர்கள் வான்வெளியில் ரோந்து செல்வதில் பங்களிப்பதை நான் அறிவேன்” என்று இஸ்ரேலின் தலைமை ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

மேலும், பிரெஞ்சு போர் விமானங்கள் இரானின் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதா என்பது குறித்த சரியான விவரங்கள் தன்னிடம் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கெனவே, பிரிட்டன், அமெரிக்கா, ஜோர்டான் ஆகியவை இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள உதவி வருகிறது.

இஸ்ரேல் ராணுவம் கூறுவது என்ன?

இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி, “இரான் மண்ணில் இருந்து இஸ்ரேலின் மீது இரான் நேரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது,” என்றார்.

“இரான் இஸ்ரேலை நோக்கி அனுப்பும் கொலையாளி ட்ரோன்களை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். இது மிகவும் தீவிரமானது மற்றும் அபாயகரமானது,” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் வானில் எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

இரான் ஆளில்லா விமானத்தை விடுவித்ததைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

“தற்காப்பு அல்லது தாக்குதல் என்ற எந்த சூழ்நிலைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இஸ்ரேல் தேசம் பலமானது. இஸ்ரேல் பாதுகாப்புப் படை வலுவாக உள்ளது. மக்கள் வலிமையானவர்கள்,” என்றார்.

மேலும், அமெரிக்காவுடன், பிரிட்டன், பிரான்ஸ் மற்றூம் பல நாடுகளும் எங்களுக்கு ஆதரவளித்து வருவதைப் பாராட்டுவதாக நெதன்யாகு கூறினார்.

இந்த வாரத் தொடக்கத்தில், இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் இரான் இஸ்ரேலை தாக்கினால், இரானுக்குள் பதிலடியைக் கொடுக்கும் என்று எச்சரித்தனர்.

இரான் தாக்குதலின் செய்திக்குப் பிறகு, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஏட்ரியன் வாட்சன், இஸ்ரேலை பாதுகாப்பதில் அதிபர் பைடன் உறுதியாக இருப்பதாகக் கூறினார்.

இரானின் இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராக இஸ்ரேல் மக்களுடன் அமெரிக்கா நின்று அவர்களைப் பாதுகாக்கும் என்றார்.

“அதிபர் பைடன் தெளிவாக இருக்கிறார். இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான எங்கள் ஆதரவு உறுதியாக உள்ளது.” என, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

பிரட்டன் பிரதமர் ரிஷி சுனக், இரானின் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு, இஸ்ரேல் மற்றும் அதன் அனைத்து பிராந்திய கூட்டாளிகளின் பாதுகாப்பிற்காக நிற்பதாக உறுதியளித்துள்ளார்.

சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானின் தூதரகம் மீதான தாக்குதல் உட்பட, இஸ்ரேலின் தொடர்ச்சியான குற்றங்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக இரானிய ராணுவத்தின் மிகவும் சக்திவாய்ந்த பிரிவான ஐ.ஆர்.ஜி.சி கூறுகிறது.

கவலை தெரிவித்த ஐ.நா.

படக்குறிப்பு,ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ், “பிராந்திய அளவிலான பேரழிவு அதிகரிப்பின் ஆபத்து குறித்து ஆழ்ந்த கவலையுடன்” இருப்பதாகக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “இன்று மாலை இரான் இஸ்லாமிய குடியரசினால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பெரிய அளவிலான தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த விரோதங்களை உடனடியாக நிறுத்துமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இஸ்ரேல் மீது இரானின் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல் தொடர்பாக ஐநா பாதுகாப்புக் கவுன்சில் அவசர கூட்டத்திற்காக ஞாயிற்றுக்கிழமை கூடும் என்று அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த அவசர கூட்டத்தைக் கூட்டுமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவர் வனேசா ஃப்ரேசியருக்கு இஸ்ரேல் எழுதிய கடிதத்தில், இந்த தாக்குதல்கள் “சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹெஸ்புல்லா மற்றும் ஏமனில் ஹூத்திகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் இரான் தனது சர்வதேச கடமைகளை மீறுவதாகவும், “பல ஆண்டுகளாக ஸ்திரமின்மையின் சிற்பியாக” இருப்பதாகவும் அந்தக் கடிதம் குற்றம் சாட்டியுள்ளது.

“தாக்குதல்களின் அளவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உள்ளது. மேலும், இது இஸ்ரேலின் இறையாண்மை, சர்வதேச சட்டம் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை அப்பட்டமாக மீறுவதாகும்” என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரானிய ஆயுதப் படைகளின் முதன்மைப் பிரிவான இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்குமாறு இஸ்ரேல் கோரியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவருக்கு இரான் எழுதிய கடிதத்தில், “ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் 51-வது பிரிவில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி தற்காப்புக்காகவும், இஸ்ரேலின் தொடர்ச்சியான ராணுவ ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்கும் விதமாகவும்” செயல்பட்டதாகக் கூறியுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

[ad_2]

Source link